தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பணியாற்றும் போலீசாருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பணியாற்றும் போலீசாருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடந்தது.

Update: 2020-04-22 22:15 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் 9 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 4 பேர் குணமடைந்து திரும்பினர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஊட்டி தனி வார்டில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரிசோதனை முடிவை உடனடியாக அறிய 300 ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் முதல் கட்டமாக நீலகிரி மாவட்டத்துக்கு வந்தது. ஊட்டியில் தனிமைப்படுத்தப்பட்ட காந்தல் பகுதியில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.

அப்பகுதியில் பணிபுரிந்த போலீசார், தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்களிடம் இருந்து ரத்த மாதிரி எடுக்கப்பட்டு நவீன கருவியில் இடப்பட்டு 15 நிமிடங்களில் முடிவு தெரிந்தது. ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் 100 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 100 பேருக்கும் பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. இதற்கிடையே கொரோனா தொற்றை விரைவில் கண்டறியும் நவீன கருவியான ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் தவறான முடிவை காட்டியதால், அந்த கருவிகளை பரிசோதனைக்கு பயன்படுத்த வேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதையடுத்து நீலகிரியில் நவீன கருவிகள் மூலம் நடத்தப்படும் கொரோனா பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நடமாடும் ஆய்வக வாகனம் மூலம் மீண்டும் கொரோனா பரிசோதனை ஊட்டி காந்தலில் நடைபெற்றது. அங்கு சுழற்சி முறையில் பணிபுரிந்து வரும் போலீசார் 45 பேருக்கு தொண்டை சளி மாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. அவர்கள் ஆய்வகத்துக்குள் செல்லும் போதும், வெளியே வரும் போதும் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திக்கொண்டனர்.

குன்னூரில் 20 பேர், கோத்தகிரியில் 20 பேருக்கும் மாதிரி எடுக்கப்பட்டன. நவீன கருவி பரிசோதனை நிறுத்தப்பட்டதால், நடமாடும் வாகனம் மூலம் பி.சி.ஆர். பரிசோதனைக்காக தொண்டை சளி மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு மாதிரி எடுக்கப்பட இருக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 407 பேரிடம் இருந்து மாதிரிகள் எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 407 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்து உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்