கொரோனா வைரசால் குறுவை நெல் சாகுபடி பாதிப்பு விவசாயிகள் வேதனை

தா.பழூர் பகுதியில் கொரோனா வைரசால் குறுவை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Update: 2020-04-23 03:15 GMT
தா.பழூர், 

தா.பழூர் பகுதியில் கொரோனா வைரசால் குறுவை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நடவு பணி

அரியலூர் மாவட்டம், தா.பழூர், காரைக்குறிச்சி, மதனத்தூர், வாழைக்குறிச்சி, அருள்மொழி, தென்கச்சிபெருமாள்நத்தம், மேலகுடிகாடு, கீழகுடிகாடு, பாலசுந்தரபுரம், அடிக்காமலை, அண்ணங்காரம்பேட்டை, இடங்கண்ணி, சோழமாதேவி, குறிச்சி, கோடாலிக்கருப்பூர், கண்டியங்கொல்லை ஆகிய பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் நடவு பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமப்புறங்களில் நடவு பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது.

பாதிப்பு

மேலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் காரணமாக கூலித்தொழிலாளர்கள் நடவு பணிக்கு வர பயப்படுகிறார்கள். அதையும் மீறி சிலர் வந்தாலும் அவர்கள் கிராமங்களில் இருந்து வயல் பகுதிகளுக்கு வருவதற்கு அவர்களை முன்பு போல் டிராக்டர்களில் அழைத்து சென்றால் சமூக இடைவெளி பாதிப்பு ஏற்படும் என்பதால் 2 அல்லது 3 கிலோ மீட்டர்கள் நடத்தியே அழைத்து வரப்படுகின்றனர். இது கூலித்தொழிலாளர்களுக்கு சோர்வை ஏற்படுத்துகிறது.

கூலித்தொழிலாளர்களை முக கவசம் அணிய செய்வதும், சமூக இடைவெளியை உறுதி செய்வதும் பெரிய சவாலாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். சரியான நேரத்தில் நாற்று பறித்து நடவு செய்யாவிட்டால் மகசூல் குறையும். இந்த கொரோனா வைரசால் நெல் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்