திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கொரோனாவுக்கு எதிராக ‘ஆன்லைன்’ மூலம் அதிவிரைவு செயலி உருவாக்கும் போட்டி
திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கொரோனாவுக்கு எதிராக ஆன்லைன் மூலம் அதிவிரைவு செயலி உருவாக்கும் போட்டி வருகிற 27-ந்தேதி முதல் மே மாதம் 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
திருச்சி,
திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கொரோனாவுக்கு எதிராக ஆன்லைன் மூலம் அதிவிரைவு செயலி உருவாக்கும் போட்டி வருகிற 27-ந்தேதி முதல் மே மாதம் 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக திருச்சி அண்ணா பல்கலைக்கழக டீன் செந்தில்குமார் வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அதிவிரைவு செயலி
கொரோனா வைரஸ் பரவலுக்கும், பாதிப்புகளுக்கும் எதிரான தொழில் நுட்பங்களை கண்டறிந்து பெருந்தொற்று அச்சத்தை தடுத்து நிறுத்தும் வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்படி சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கேட்டுக்கொண்டு உள்ளார்.
இதையொட்டி திருச்சி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞானிகள் ஆலோசனைப்படி அகில இந்திய தொழில் நுட்ப கழகத்தின் அங்கீகாரத்துடன் தமிழக அளவில் வருகிற 27-ந்தேதி முதல் மே 6-ந்தேதி வரை ‘ஆன்லைன்’ மூலம் கொரோனாவுக்கு அதிவிரைவு செயலி உருவாக்கும் போட்டி (ஹேக்கத்தான்) நடைபெற உள்ளது.
நோக்கம் என்ன?
கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை கண்டறிதல், அந்த தொழிலாளர்களுக்கான தங்குமிடங்கள், தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான பணிகளை பிரித்து அளித்தல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மையங்கள், மருந்தகங்கள் முதல் நோயாளிகளின் அறிகுறிகள் நிலை தொடர்பான தகவல்கள், மருத்துவர் நியமனம், ஒருங்கிணைந்த பேரிடர் கால கட்டணமில்லா தொலைபேசி எண்கள், மக்கள் நெருக்கத்தை அறிந்து எல்லையை வரையறுத்தல், நிவாரண நிதி, நிவாரண பொருள் திரட்டுதல், கோவிட்-19 பரிசோதனைகளை நடத்தி அதன் முடிவுகளை ஆன்லைனில் பெறுதல், தனிமைப்படுத்தப்படும் நோயாளிகளுக்கு உணவு அளித்தல், அரசு பணிகளை ஒருங்கிணைத்தல், அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி கோரும் தனிமனிதர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்தல், சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் வினியோகம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல், தனித்து வாழும் பெண்களுக்கு உதவுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே இந்த அதிவிரைவு செயலியின் நோக்கம் ஆகும்.
பரிசு
சிறந்த செயலி மற்றும் இணையதளங்களை உருவாக்குபவர்களுக்கு தேசிய அளவிலும், மாநில அளவிலும் பரிசுகள் வழங்கப்படும். அவர்கள் வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை பெற இது வழி வகுக்கும். இதில் பங்கேற்பது எப்படி?, எந்த மாதிரியான செயலியை உருவாக்க வேண்டும்?, என்பது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு http://www.covid19hackathon.in/ என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.