விவசாயிகளுக்கு உதவ பழக்கூழ் தயாரிக்கும் மையங்கள் - மந்திரி பி.சி.பட்டீல் பேட்டி
கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு உதவ பழக்கூழ் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்படும் என்று விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் கூறினார். விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
துமகூரு,
“கொரோனாவை தடுக்க கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். நான் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளேன். இன்று (நேற்று) துமகூருவில் சுற்றுப்பயணம் செய்து அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.
பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு மாநில அரசு தனது பங்காக ரூ.18.59 கோடியை ஒதுக்க முடிவு செய்துள்ளது. இதனால் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 876 விவசாயிகள் பயன் பெறுவார்கள். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிவாரணம் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளேன். மீண்டும் ஒரு முறை முழுமையான தகவல் களுடன் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளேன்.
பழக்கூழ் தயாரிக்கும் மையங்கள்
தக்காளி, பழங்கள் சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் அவற்றை பதப்படுத்தும் கிடங்குகளை தாலுகாவுக்கு ஒன்று வீதம் அமைக்க வேண்டியுள்ளது. வேளாண்மை மார்க்கெட்டுகளை மேலும் பலப்படுத்த வேண்டும். அன்னாசி, தர்ப்பூசணி உள்ளிட்ட பழங்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகின்றன. அந்த பழங்கள் விற்பனை ஆகாததால் அவை அழுகி போய்விட்டன.
இதனால் விவசாயிகளுக்கு உதவ பழக்கூழ் தயாரிக்கும் மையங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் பழக்கூழ் தயாரித்து நீண்ட காலம் வைத்திருந்து விற்பனை செய்ய முடியும். விவசாயிகளுக்கு தரமான விதைகள், கிருமிநாசினி மருந்துகள் மற்றும் உரங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலத்தின் எந்த பகுதியிலாவது, தரமற்ற விதைகள் விற்கப்படுவது தெரியவந்தால் அதற்கு அந்தந்த மாவட்ட விவசாய இணை இயக்குனர்கள் தான் பொறுப்பு. அந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்காணிப்பு பிரிவு
விவசாயத்துறையில் செயல்பட்டு வரும் கண்காணிப்பு பிரிவு தீவிரமாக செயல்படுகிறது. அந்த குழு விதைகள் மற்றும் உரங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் சோதனை நடத்தி, தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. துமகூருவில் விவசாயிகளுக்கு தேவையான அளவுக்கு உரம், விதைகள், மருந்துகள் இருப்பு உள்ளது.”
இவ்வாறு பி.சி.பட்டீல் கூறினார்.
பேட்டியின்போது, சட்டத்துறை மந்திரி மாதுசாமி உடன் இருந்தார்.