முதல்-மந்திரி, எதிர்க்கட்சி தலைவர் பங்களாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் போலீஸ், போலீஸ்காரருக்கு கொரோனா
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் பங்களாக்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் போலீஸ், போலீஸ்காரருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மும்பை,
மும்பை பாந்திராவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மாதோஸ்ரீ இல்லம் முன் டீ விற்பனை செய்யும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த மாதம் கண்டறியப்பட்டது. இதையடுத்து முதல்-மந்திரின் மாதோஸ்ரீ இல்லம் மற்றும் மலபார்ஹில் பகுதியில் உள்ள அவரது அரசு (வர்ஷா) பங்களாவிற்குள் நுழையும் அனைவருக்கும் தெர்மல் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பைதோனி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வர்ஷா பங்களாவுக்கு வந்தார். அப்போது தெர்மல் பரிசோதனையில் அவரது உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில் பெண் போலீசுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 7 பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் 2 பெண் போலீசார் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் பைதோனி போலீஸ்நிலைய போலீசார் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேவேந்திர பட்னாவிஸ் பங்களா
இதேபோல சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிசின் சாகர் அரசு பங்களாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸ்காரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சாகர் பங்களாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து போலீசாரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
முதல்-மந்திரி, எதிர்க்கட்சி தலைவர் பங்களாவுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் போலீஸ், போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.