பெரும்பாக்கத்தில் கூலித்தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை - நண்பர் படுகாயம்
பெரும்பாக்கத்தில் கூலித்தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். தடுக்க முயன்ற அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் கிரிதரன்(வயது 24). கூலி தொழிலாளி. இவருடைய தம்பி லட்சுமணன் என்ற ரமேஷ் (20). இவர், சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்றுமுன்தினம் இரவு அந்த பகுதியைச் சேர்ந்த சில சிறுவர்கள் வீடியோ கேம் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கு வந்த ரமேஷ், அந்த சிறுவர்களை அடித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சிவா(25), தனது நண்பர் ஜானகிராமன் என்பவருடன் சென்று ரமேஷிடம் இதுபற்றி தட்டிக் கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஜானகிராமனை ரமேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது.
கத்தியால் குத்திக்கொலை
இதையடுத்து சிவா, ஜானகிராமன் இருவரும் தங்களது நண்பர்கள் 5 பேருடன் மீண்டும் ரமேசை தேடி சென்றனர். ஆனால் அவரை காணாததால் இதுபற்றி அங்கிருந்த ரமேசின் அண்ணன் கிரிதரனிடம் தட்டி கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சிவா திடீரென தன்னிடம் இருந்த கத்தியால் கிரிதரனை குத்தினார். இதை தடுக்க முயன்ற கிரிதரனின் நண்பர் ஆனந்தனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். உடனடியாக சிவா உள்பட அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி அந்த பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அங்கு கிரிதரன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய ஆனந்தனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சிவா மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.