ராமநாதபுரத்தில் மழை; மக்கள் மகிழ்ச்சி
ராமநாதபுரத்தில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் வீடுகளில் வெப்ப சலனம் காரணமாக சிறியவர் முதல் பெரியவர் வரை சொல்ல முடியாத அவதி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை திடீரென ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த மழையால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. மழை நின்றதும் மீண்டும் வெயில் தொடங்கியது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக நேற்று காலை மாவட்ட நிர்வாகம் அனுமதித்த நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக வெளியில் வந்த பொதுமக்கள் மழையால் ஆங்காங்கே பூட்டியிருந்த கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் ஓரமாக ஒதுங்கி நின்றனர்.
மழை நின்ற பின்னர் அவசர அவசரமாக பொருட்களை வாங்கி கொண்டு சென்றனர். திடீர் மழையால் ராமநாதபுரத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கத்தில் அவதியடைந்த பொதுமக்கள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.