பாம்பன் ரோடு பாலத்தில் குழாய் உடைப்பால் கடலில் வீணாக கலக்கும் குடிநீர் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பாம்பன் ரோடு பாலத்தில் குழாய் உடைப்பால், குடிநீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவை, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதே போல் பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் பகுதிக்கு மண்டபம் காந்திநகர் அருகே உள்ள குடிநீரேற்று நிலையத்திற்கு காவிரி கூட்டுக்குடிநீர் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து பூமிக்கடியில் குழாய் பதிக்கப்பட்டு அதன் வழியாக குடிநீர் ராமேசுவரம் தீவு பகுதிக்கு கொண்டு வரப்படுகிறது. ராமேசுவரம் தீவு பகுதிக்கு, பாம்பன் ரோடு பாலத்தின் நடை பாதைகளில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலமாக காவிரி குடிநீர் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்தநிலையில் பாம்பன் ரோடு பாலத்தின் நடை பாதைகளில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் ஒரு சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2 வாரத்திற்கும் மேலாக, குடிநீர் நடைபாதையில் ஓடுவதுடன், ரோடு பாலத்தின் தடுப்பு சுவரின் இடைவெளி வழியாக வீணாக கடலில் விழுந்து வருகிறது.
ரோடு பாலத்தின் சுவரின் இடைவெளி வழியாக குடிநீர் அருவி போல் கடலில் விழுந்து வீணாகி வருகிறது. இதுபோன்று அடிக்கடி குழாய் உடைப்பால் குடிநீர் கடலில் கலப்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தற்போது மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், பொதுமக்கள் குடி நீருக்காக கடும் அவதியடைந்து வருகின்றனர்.
அவர்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அலைந்து தள்ளு வண்டிகளில் குடிநீர் சேகரித்து வரும் நிலையில், பாம்பன் ரோடு பாலத்தில் குழாய் உடைப்பால் கடலில் வீணாக குடிநீர் கலப்பது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் கவலையுடன் தெரிவித்தனர். மேலும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தர விட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.