காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி: கைத்தறி நெசவாளர்கள் 30-ந்தேதிக்குள் விவரங்களை சமர்ப்பிக்கலாம் - மாவட்ட கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு வருகிற 30-ந்தேதிக்குள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2020-04-22 22:45 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதையொட்டி, அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் கருதி தமிழ்நாடு கட்டுமானம், அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு உள்பட 17 தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு இரண்டு கட்டங்களாக நிவாரண உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு கைத்தறி நெசவு செய்யும் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 8,692 நெசவாளர்களில் 4,966 நெசவாளர்களுக்கு வங்கிக் கணக்கு விவரங்கள் ஏற்கனவே நலவாரியத்தில் உள்ளன.

வருகிற 30-ந்தேதிக்குள்...

காஞ்சீபுரம், பிள்ளையார்பாளையம், அய்யன்பேட்டை, செவிலிமேடு, ஓரிக்கை, களக்காட்டூர், நத்தப்பேட்டை, சின்ன காஞ்சீபுரம், பல்லவர்மேடு உள்பட பல பகுதிகளில் வசிக்கும் மீதமுள்ள 3,726 நெசவாளர்களில் ஏப்ரல் 20-ந்தேதி வரை 552 நெசவாளர்களுக்கு வங்கி கணக்கு விவரங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகையை பெறுவதற்கு வங்கிக்கணக்கு விவரங்களை சமர்ப்பிப்பது அவசியம் என்பதால், நிலுவையிலுள்ள 3,174 நெசவாளர்கள் புதியதாக வங்கி கணக்கு தொடங்கியோ அல்லது ஏற்கனவே வங்கி கணக்கு வைத்திருந்தால் அதன் விவரத்தையோ எண்: 824, கே.எஸ்.பார்த்தசாரதி தெரு, காமாட்சியம்மன் காலனி, ஓரிக்கை, காஞ்சீபுரம் என்ற முகவரியில் தெரிவிக்கலாம்.

அல்லது 9444713862 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலமாகவும் வருகிற 30-ந்தேதிக்குள் விவரங்களை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் செய்திகள்