சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உலக சுகாதார சிறப்பு குழுவினர் ஆய்வு

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உலக சுகாதார சிறப்பு குழுவினர் ஆய்வு நடத்தினர்.

Update: 2020-04-22 23:00 GMT
சேலம், 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. சேலத்தில் இந்தோனேசியாவில் இருந்து வந்த 4 முஸ்லிம் மதபோதகர்கள் உள்பட 24 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இவர்களில் 10 பேர் குணமடைந்ததால் அவர்கள் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று உலக சுகாதார அமைப்பின் சிறப்பு மருத்துவ குழுவினர் டாக்டர் வேலன் தலைமையில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த குழுவினர் தனிமை வார்டுக்கு சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். மேலும் டாக்டர்கள், நர்சுகளின் பாதுகாப்பு குறித்தும், மருந்துகள் போதிய அளவு உள்ளதா? என்பது குறித்தும் ஆஸ்பத்திரி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர். இதையடுத்து ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சில ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்