ஈரோட்டில் மஞ்சள் ஏலம் தொடங்கியது - கலெக்டர் சி.கதிரவன் பார்வையிட்டார்

ஈரோட்டில் நேற்று தொடங்கிய மஞ்சள் ஏலத்தை கலெக்டர் சி.கதிரவன் பார்வையிட்டார்.

Update: 2020-04-22 23:00 GMT
ஈரோடு, 

ஈரோடு மஞ்சள் மார்க்கெட் ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டு இருந்தது. தமிழ்நாடு அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், செம்பாம்பாளையம் தனியார் கிடங்கு உரிமையாளர்கள் சங்க விற்பனை மையம், வேளாண் கூட்டுறவு சங்க விற்பனை மையம், கோபி வேளாண்மை கூட்டுறவு சங்க விற்பனை மையம் என்று ஈரோட்டில் உள்ள 4 சந்தைகளும் மூடப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பேணிக்காக்கும் வகையில் வேளாண்மை சார்ந்த விற்பனை மையங்கள் இயங்கலாம் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத்தொடர்ந்து ஈரோடு செம்பாம்பாளையத்தில் உள்ள மஞ்சள் விற்பனைக்கூடம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது.

இந்த விற்பனையில் 28 விவசாயிகள் பங்கேற்றனர். அவர்கள் தாங்கள் விற்பனைக்கு கொண்டு வந்த மஞ்சள் மாதிரிகளை ஏலத்துக்காக லாட்டுகளில் வைத்து இருந்தனர். ஏலம் தொடங்குவதற்கு முன்பாக, மஞ்சள் மார்க்கெட்டில் செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவர், மஞ்சள் எடுத்து வந்த விவசாயிகளின் கோரிக்கை மற்றும் வியாபாரிகளின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து கொண்டார். மேலும், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்த மஞ்சள், அவற்றின் தரம் குறித்தும் கேட்டு தெரிந்து கொண்டார்.

பின்னர், வணிகர்கள், விவசாயிகள், விற்பனைக்கூட பணியாளர்கள் அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன் உடன் இருந்தார்.

நேற்று 28 விவசாயிகள் மஞ்சள் விற்பனைக்கு எடுத்து வந்திருந்தனர். வியாபாரிகள் பலரும் வந்து மஞ்சள் ஏலம் கேட்டனர். ஒரு குவிண்டால் மஞ்சள் அதிக பட்சமாக ரூ.6 ஆயிரத்து 810-க்கும், குறைந்த பட்சமாக ரூ. 6 ஆயிரத்து 300-க்கும் விற்பனையானது. 11 வியாபாரிகள் மொத்தம் 26 டன் மஞ்சளை விலைக்கு வாங்கினார்கள். விற்பனை தொடங்கியதை முன்னிட்டு மஞ்சள் வளாகம் முற்றிலும் கிரிமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து மஞ்சள் விற்பனை நடைபெறும் என்று நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்