கொரோனா பரவும் வேகம் குறைந்து வருகிறது: நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை 35 பேர் ‘டிஸ்சார்ஜ்’

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவும் வேகம் குறைந்து வருகிறது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் ‘டிஸ்சார்ஜ்‘ ஆகி உள்ளனர். தூத்துக்குடியில் 8 பேர் வீடு திரும்பினர்.

Update: 2020-04-22 23:15 GMT
நெல்லை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு வருகிற 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இடங்களில் சுகாதாரப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலப்பாளையம் பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருந்ததால், அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஊருக்குள் செல்லும் சாலைகள் அடைக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், என்.ஜி.ஓ. காலனி, நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகர், நெல்லை டவுன், பேட்டை, பாளையங்கோட்டை சிவன் கோவில் தெரு, கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள டார்லிங் நகர் பகுதி, களக்காடு, பத்தமடை ஆகிய 9 இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நெல்லை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தினந்தோறும் சுகாதாரப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

35 பேர் ‘டிஸ்சார்ஜ்’

இந்த தொடர் நடவடிக்கையால் நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறைந்து வரு கிறது. நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு வார்டில் 64 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். 

அவர்களுக்கு தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் 35 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்‘ ஆகி உள்ளனர். இவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். 

மீதி உள்ள 29 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதவிர, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 31 பேருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் 27 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் ஒரு மூதாட்டி இறந்து உள்ளார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த காயல்பட்டினம், தூத்துக்குடி, பேட்மாநகரம், ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த 7 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

அதே போன்று பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அய்யனாரூத்தை சேர்ந்த ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் குணமடைந்து உள்ளனர். மற்றவர்களும் வேகமாக குணமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

புதிய தொற்று இல்லை

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புதிதாக நோய் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்படவில்லை. கொரோனா அறிகுறியுடன் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பரவலின் வேகம் குறைந்து உள்ளது. 

இந்த நிலை நீடித்தால் விரைவில் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்குள் தூத்துக்குடி அடியெடுத்து வைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்