பள்ளிவாசல்களுக்கு மானிய விலையில் வழங்கும் அரிசியை பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும் - பள்ளிவாசல் நிர்வாகிகள் கடிதம்

ரம்ஜான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு மானிய விலையில் அரசு வழங்கும் பச்சரிசியை இந்த ஆண்டு, அரசே பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று உடுமலை ஆர்.டி.ஓ. விடம் உடுமலை வட்டார அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் கடிதம் கொடுத்தனர்.

Update: 2020-04-22 23:00 GMT
உடுமலை,  

ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகையையொட்டி ரமலான் மாதம் முழுவதும், அனைத்து பள்ளிவாசல்களிலும் கஞ்சி காய்ச்சி, மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் அனைத்து சமுதாய மக்களுக்கும் வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு ரம்ஜான் நோன்பு வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத்தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளன.

அதன்படி பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சி வழங்க அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் உடுமலை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை, உடுமலை வட்டார அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று உடுமலை தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. ரவிக்குமாரை சந்தித்து ஒரு கடிதம் கொடுத்தனர். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சி வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு வழக்கமாக பல ஆண்டுகளாக மானிய விலையில் பச்சரிசி வழங்கி வந்துள்ளது. இந்த ஆண்டு உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய் தொற்று அச்சத்தால், மத்திய, மாநில அரசுகள் உத்தரவுப்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளதால் புனித ரமலான் மாதத்தில் அனைத்து மக்களுக்கும், நோன்பளிக்கும் கஞ்சி காய்ச்சி வழங்க தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. வழக்கமாக ரமலான் மாதம் முழுவதும் கஞ்சி காய்ச்சி அனைத்து சமுதாய மக்களுக்கும் மத நல்லிணக்கத்தோடு வழங்கி வருவது வாடிக்கையான நிகழ்வு.

தற்போது கொரோனா வைரஸ் நோய் அச்சுறுத்தல் காரணமாக, அரசு வழங்கும் மானிய விலை அரிசியை வாங்கி இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் பிரித்துக்கொடுப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை. அதனால் இந்த ஆண்டு உடுமலை தாலுகாவை சேர்ந்த அனைத்து பள்ளிவாசல்களும், மேற்படி அரிசியை பொதுமக்களுக்கு கொடுக்க தமிழக அரசே எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்டவாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் உடுமலை தாலுகாவில் உள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்