மதுபான விற்பனை புகார் எதிரொலி: கலால் துறை துணை ஆணையர் திடீர் மாற்றம்

புதுவையில் மதுபான விற்பனை புகார் எதிரொலியாக கலால்துறை துணை ஆணையர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2020-04-22 07:23 GMT
புதுச்சேரி, 

புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மதுபான விற்பனை தடையின்றி நடந்தது. மதுபான கடைகள் ‘சீல்’ வைக்கப்பட்ட நிலையில் இந்த விற்பனை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாள்தோறும் மதுபானங்கள் பிடிபடுவது, மதுபான கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதும் வழக்கமான நடைமுறையாக இருந்தது. இது தொடர்பான விசாரணையில் கலால்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இந்த மதுபான விற்பனைக்கு உடந்தையாக இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் மதுபான விற்பனைக்கு உடந்தையாக இருந்த தாசில்தார் கார்த்திகேயன் உள்பட கலால் துறையினர் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் போலீஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதேபோல் 2 போலீசார் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கலால் துறை துணை ஆணையராக பதவி வகித்து வந்த தயாளன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவரை புதுவை அரசின் நிர்வாக சீர்திருத்தத் துறையில் பணியில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவர் வகித்து வந்த கலால் துறை துணை ஆணையர் பொறுப்பை வில்லியனூர் சப்-கலெக்டர் சஷ்வத் சவுரப் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதுவை அரசு சார்பு செயலாளர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்