கொரோனா தொற்று பரவும் அபாயம்: தனியார் சிமெண்டு ஆலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கூறி தனியார் சிமெண்டு ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-04-22 04:57 GMT
வி.கைகாட்டி, 

கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கூறி தனியார் சிமெண்டு ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை

கொரோனா வைரசால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் விதிமுறைகளை மீறி அல்ட்ராடெக் சிமெண்டு ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட சிமெண்டுகள் நேற்று முன் தினம் இரவு மட்டும் 200 லாரிகளுக்கு மேல் சிமெண்டு ஏற்றி சென்றுள்ளன. இந்த லாரிகளில் எடுத்துச்செல்லப்படும் சிமெண்டுகள் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் லாரி டிரைவர்கள் மற்றவர்களிடம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி அவர்கள் மீண்டும் வி.கைகாட்டிக்கு வரும்போது அவர்கள் மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே நேற்று அப்பகுதி மக்கள் ஆலையை சமூக இடைவெளியை கடை பிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதனை அறிந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, கயர்லாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், உங்களின் (பொதுமக்கள்) கோரிக்கைகள் குறித்து ஆலை நிர்வாகத்திடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்