ஊரடங்கால் பாதிப்பு: தள்ளுவண்டி கடையில் விற்பனையாகாமல் அழுகும் பழங்கள் மாடுகளுக்கு உணவாக கொட்டப்படுகிறது
ஊரடங்கால் புதுக்கோட்டையில் தள்ளுவண்டி கடையில் விற்பனையாகாமல் பழங்கள் அழுகி வீணாகிறது. இதனை வியாபாரிகள் மாடுகளுக்கு உணவாக கொட்டுகின்றனர்.
புதுக்கோட்டை,
ஊரடங்கால் புதுக்கோட்டையில் தள்ளுவண்டி கடையில் விற்பனையாகாமல் பழங்கள் அழுகி வீணாகிறது. இதனை வியாபாரிகள் மாடுகளுக்கு உணவாக கொட்டுகின்றனர்.
சில்லரை வியாபாரிகள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புதுக்கோட்டையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை ஒரு சில கடைகள் திறந்துள்ளன. மேலும் தள்ளுவண்டிகளிலும் சில்லரை வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இதில் ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம், திராட்சை, சப்போட்டா, வாழைப்பழங்கள் உள்ளிட்ட பழ வகைகளை தள்ளுவண்டியில் வைத்தும் விற்கின்றனர். இந்த நிலையில் பகல் 1 மணிக்கு மேல் கடைகள் செயல்பட அனுமதி இல்லாததால் தள்ளுவண்டி வியாபாரிகள் வியாபாரம் செய்தால், எடை கற்கள் மற்றும் தள்ளுவண்டிகளை போலீசார் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
வியாபாரம் நஷ்டம்
ஊரடங்கால் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டி உள்ளதால் தள்ளுவண்டி பழக்கடை வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. பகல் 1 மணிக்கு வியாபாரம் முடிந்த பின் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே இருந்து வீட்டிற்கு சென்ற பழ வியாபாரி ஒருவர், தனது தள்ளுவண்டி கடையில் அழுகிய பழங்களை மாட்டிற்கு உணவாக கொட்டிக்கொண்டிருந்தார். இது குறித்து அந்த பழ வியாபாரி கூறியதாவது:-
எங்களுக்கு இந்த தொழிலை விட்டால் வேறு தொழில் தெரியாது. மொத்த வியாபாரிகளிடம் இருந்து பழங்களை பெற்று தெருக்களில் தள்ளுவண்டியில் சென்று விற்பனை செய்து வருகிறோம்.
பழங்கள் அழுகி வீணாகுதல்
குறிப்பிட்ட நேரத்திற்குள் பழங்கள் அனைத்தும் பெரும்பாலும் விற்றுவிடுவதில்லை. ஒரு சில பழ வகைகள் மட்டுமே விற்பனையாகிறது. ஒரு சில பழ வகைகள் மட்டும் ஓரிரு நாட்கள் தாக்குப்பிடிக்க கூடியதாக உள்ளது. அதனை வைத்து வியாபாரம் செய்ய முடியும். மற்ற பழ வகைகள் எல்லாம் விற்பனையாகாமல் அழுகிவிடுகின்றன. எனக்கு தினமும் 2 கிலோ அளவிற்கு பழங்கள் அழுகி வீணாகிறது. மற்ற தள்ளுவண்டி வியாபாரிகளுக்கும் இதேநிலை தான்.
மாலை 6 மணி வரை...
அழுகி வீணாகும் பழங்களை மாடுகளுக்கு உணவாக கொட்டுகிறோம். சில நேரங்களில் குப்பைகளில் கொட்டப்படுகிறது. தினமும் நஷ்டத்தில் நாங்கள் வியாபாரம் நடத்துகிறோம். சில நாட்களில் சம்பளம் கூட எடுக்க முடியாது. எங்களுக்கு கூடுதலாக மாலை 6 மணி வரை பழங்கள் விற்க அனுமதி கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.