பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட குளித்தலை போலீசாருக்கு கொரோனா பரிசோதனை ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட குளித்தலை போலீசாருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு, ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
குளித்தலை,
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட குளித்தலை போலீசாருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு, ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
கொரோனா தொற்று பரிசோதனை
கரூர் மாவட்டம் குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு கட்டுப்பாட்டில் உள்ள குளித்தலை, லாலாபேட்டை, மாயனூர், தோகைமலை, சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி மற்றும் அனைத்து மகளிர் காவல்நிலையங்களில் பணிபுரியும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பலர் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் ரோந்து பணி, சோதனைச் சாவடிகளில் வாகனங்களை தணிக்கை செய்தல், தடை செய்யப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணி, பொது இடங்களில் வாகன சோதனை போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில் குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு எல்லைக்குட்பட்ட இந்த 6 போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பது குறித்த முதற்கட்ட பரிசோதனை குளித்தலையில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டது.
சளி-ரத்த மாதிரிகள்
இதில், குளித்தலை வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார், அரசு மருத்துவர் அமீர்தீன் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினரால் குளித்தலை போலீஸ் துணைசூப்பிரண்டு கும்மராஜா உள்பட சுமார் 30- க்கும் மேற்பட்ட போலீசாரின் ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது. அதுபோல் எடுக்கப்பட்ட மாதிரிகள் அனைத்தும் பரிசோதனைக்காக அனுப்பப்படவுள்ளதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.
அதேபோல வெளிமாநிலங்களில் இருந்து வந்து குளித்தலை பகுதியில் தங்கியுள்ளவர்கள் யார்? என்பதை கண்டறிந்து அவர்களுக்கும் மற்றும் அவர்கள் தங்கியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகளையும் மருத்துவக்குழுவினர் எடுத்து அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய பரிசோதனைக்காக அனுப்பி வருகின்றனர்.