வாகனங்கள் மூலம் எடுத்து சென்று விவசாயிகளுக்கு நேரடியாக உரம் விற்பனை
வாகனங்கள் மூலம் எடுத்து சென்று விவசாயிகளுக்கு நேரடியாக உரம் விற்பனை செய்யப்படுகிறது.
ஊட்டி,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உரம், களைக்கொல்லி மருந்துகள், விதைகள் விற்கும் தனியார் நிலையங்களும் மூடப்பட்டன. இதனால் காய்கறி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதன் காரணமாக தங்களிடம் இருப்பில் இருந்த உரம் மற்றும் மருந்துகளை கொண்டு விவசாய பணியில் ஈடுபட்டனர். விதைக்கும் போதே உரம் போட்டால்தான், காய்கறி செடிகள் நன்றாக செழித்து வளருவதோடு, அதிக மகசூலை அளிக்கும். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதை கருத்தில் கொண்டு ஊட்டி நகரில் சில விற்பனை நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், கிராமப்புற விவசாயிகளால் நகருக்கு வந்து வாங்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
ஒருவேளை வாங்கினாலும், அதை எடுத்துச்செல்ல சரக்கு வாகனங்களுக்கு அதிக வாடகை செலுத்த வேண்டிய நிலை காணப்பட்டது. இதை கருத்தில் கொண்டு வேளாண்மைத்துறை மூலம், ஊரடங்கு உத்தரவால் வேளாண் இடுபொருட்கள் வாங்க முடியாமல் உள்ள விவசாயிகளுக்கு கிராமம்தோறும் சென்று விற்பனை செய்ய நடமாடும் உர விற்பனை வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் இடுபொருட்கள் கிடைக்காத கிராமங்களுக்கே நேரடியாக சென்று விவசாயிகளுக்கு வழங்கப்படுவதுடன், விவசாய பணிகள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஊட்டி வேளாண்மை உதவி இயக்குனர்(பொறுப்பு) விஜயகல்பனா கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவால் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் உரிய நேரத்தில் கிடைக்கவும், விவசாய பணிகள் பாதிக்காமல் இருக்கவும் நீலகிரி மாவட்டம் முழுவதும் நடமாடும் உர விற்பனை வாகனங்கள் செயல்பட்டு வருகிறது. கிராமப்புற விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் அவர்கள் வசிக்கும் இடத்துக்கே சென்று வழங்கப்படுகிறது.
கூடலூர், கெந்தொரை, குன்னூர், கேத்தி பாலாடா, கோத்தகிரி, தூனேரி, கக்குச்சி, தலைகுந்தா, பைக்காரா, எமரால்டு ஆகிய இடங்களுக்கு சென்று வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 10 மெட்ரிக் டன் உரம்(தனி மற்றும் கலப்பு உரங்கள்) விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.