திருச்சி உறையூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் உரிமையாளர் கைது

திருச்சி உறையூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-04-22 02:19 GMT
திருச்சி, 

திருச்சி உறையூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

போலீசாருக்கு ரகசிய தகவல்

திருச்சி மாநகரில் ஊரடங்கு அமலில் இருப்பதால், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே மதுக்கடைகளும் மூடப்பட்டுவிட்டதால், மதுப்பிரியர்கள் போதைக்காக ஏங்கிய வண்ணம் உள்ளனர். கிராமப்புறங்களில் பலர் சாராயம் காய்ச்ச தொடங்கி விட்டனர். ஆனால், நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் மதுவுக்கு பதிலாக தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளை உட்கொள்ள தொடங்கி விட்டனர்.

அத்தியாவசிய பொருட்கள் தேவைக்காக வரும் பலர், மளிகை, பெட்டிக் கடைகளில் பதுக்கி விற்கப்படும் போதைப்பொருட்களை வாங்கி செல்வதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் திருச்சி உறையூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அட்டை பெட்டிகளில்...

அதைத்தொடர்ந்து நேற்று காலை போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் தலைமையில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீஸ் படையினர் உறையூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள சிவக்குமார் என்பவரது வீட்டிற்கு சென்றனர்.

அங்கு அவரது வீட்டின் கதவு பூட்டப்பட்டு கிடந்தது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு அட்டை பெட்டிகளில் அடுக்கடுக்காக பான்பராக், குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உரிமையாளர் கைது

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், வீட்டு உரிமையாளரான சிவக்குமாரை (வயது 42) கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை இருக்கலாம் என தெரிகிறது.

கைதான சிவகுமார், திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள வடமாநில நபர் ஒருவரிடம் போதைப்பொருட்களை வாங்கி, அவற்றை வீட்டில் பதுக்கி வைத்து பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. சிவகுமார் மீது ஏற்கனவே 2 ஆண்டுக்கு முன்பு இதுபோல போதைப்பொருட்கள் பதுக்கி விற்பனை செய்ததாக வழக்கு உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்