பாதராயனபுரா வன்முறையாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறதா? - போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

பாதராயனபுரா வார்டு வன்முறையாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறதா? என்று போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2020-04-21 23:56 GMT
பெங்களூரு, 

பெங்களூரு பாதராயன புராவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் சிலர் வன்முறையில் ஈடுபட்டு போலீஸ் சோதனைச்சாவடியை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூரு பாதராயனபுராவில் நடந்த வன்முறையில் இதுவரை 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு தற்போது சூழ்நிலை கட்டுக்குள் உள்ளது. தேவையான அளவுக்கு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போலீசார் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

தேசிய பாதுகாப்பு சட்டம்

அத்தகையவர்கள் மீது பேரிடர் நிர்வாக சட்டம் மற்றும் தொற்று நோய் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா அதிகம் பாதித்துள்ள பகுதிகளை, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்துள்ளோம். அங்கு சட்டம்-ஒழுங்கை சரியான முறையில் நிர்வகிக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்