தஞ்சையில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49 ஆக உயர்வு

தஞ்சையில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-04-21 23:15 GMT
தஞ்சாவூர், 

தஞ்சையில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் ஆரம்பத்தில் ஒரு நபருக்கு தொற்று காணப்பட்டது. நாளடைவில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மேலும் 3 பேருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 2 பேர் நெல்லை மாவட்டம் பத்தமடையை சேர்ந்தவர்கள். இவர்கள் 2 பேரும் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த அதிராம்பட்டினத்தை சேர்ந்தவரை சந்தித்தவர்கள். இவர்கள், பத்தமடையில் இருந்து அதிராம்பட்டினம் வந்து தங்கி இருந்த போது மருத்துவக்குழுவினர் அவர்களை பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி வைத்து இருந்தனர். மேலும் டெல்லி சென்று வந்தவரை சந்தித்த அதிராம்பட்டினத்தை சேர்ந்த 20 வயது நபருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. 3 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

49 ஆக உயர்வு

இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் ஏற்கனவே கும்பகோணத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினார். அதைத்தொடர்ந்து நேற்று கும்பகோணத்தை சேர்ந்த 61 வயது நபர், அம்மாப்பேட்டையை சேர்ந்த 51 வயது நபர், அதிராம்பட்டினத்தை சேர்ந்த 40 வயது நபர் ஆகிய 3 பேர் குணமடைந்தனர். இதையடுத்து 3 பேரும் நேற்று வீடு திரும்பினர். இவர்கள் 3 பேரும் கடந்த 1-ந் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 4 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும் செய்திகள்