ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாராயம் பறிமுதல்; 2 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாராய ஊறலை அழித்த போலீசார், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

Update: 2020-04-21 23:15 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியில் சாராயம் காய்ச்சியதாக 2 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யனார்கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சாராயம் காய்ச்சி கொண்டிருந்த ராமர்(வயது 50), செல்லத்துரை(34) ஆகிய 2 பேரையும் கைது செய்த மதுவிலக்கு போலீசார் அவர்கள் வைத்திருந்த 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய கடுக்காய், வெல்லம் உள்ளிட்ட சில பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மலையடிவார பகுதியில் சாராயம் காய்ச்சும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. போலீசாரும் நடவடிக்கை எடுத்து சாராய ஊறல்களை அழித்து வருகின்றனர்.

இதுகுறித்து மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு நடேசன் கூறியதாவது:-

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் சாராயம் தயாரிக்கவோ அல்லது சாராய ஊறல் தயாரித்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுவிலக்கு போலீசார் இதுதொடர்பாக தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். சாராய ஊறல் தயாரித்தால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

மேலும் சாராயம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களான கடுக்காய், வெல்லம் போன்ற பொருட்களை வியாபாரிகள் சந்தேகப்படும்படியாக வரும் நபர்களுக்கு விற்கக்கூடாது என்றார்.

மேலும் செய்திகள்