மேடவாக்கம் அருகே, வீட்டின் ஜன்னலை உடைத்து தங்க நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை - போலீசார் விசாரணை
மேடவாக்கம் அருகே சாப்ட்வேர் பெண் என்ஜினீயர் வீட்டின் ஜன்னலை உடைத்து தங்க நகை, வெள்ளி பொருட்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
திருப்போரூர்,
சென்னை மேடவாக்கம் அருகே பொன்மார் மலை தெரு ராம்குமார் நகரில் வசித்து வருபவர் காயத்ரி (வயது 34). இவரது கணவர் தினேஷ். கணவர் இறந்து விட்டதால் தனது தாயார் நாகலட்சுமி மற்றும் 7 வயது மகன் லித்திக் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இவர் சிறுசேரி பூங்காவில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருவதால் மென்பொருள் நிறுவனங்கள் வீட்டிலேயே பணியாற்ற அறிவுரை வழங்கியுள்ளது. இதனால் காயத்ரி தனது சொந்த ஊரான மதுரைக்கு கடந்த மாதம் குடும்பத்துடன் சென்றுள்ளார்.
நகைகள் கொள்ளை
இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனதாக அவரது பக்கத்து வீட்டுக்காரர் காயத்ரிக்கு தகவல் கூறினார்.
இதையடுத்து அவர் நேற்று சென்னைக்கு திரும்பி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் சமையலறையில் உள்ள ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் தங்க நகைகள், ரூ.3 ஆயிரம், 1 கிலோ வெள்ளி, பித்தளை பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் நேரில் சென்று, வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.