கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபடும் 1,413 தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் : மாநகராட்சி ஆணையாளர் தகவல்

சேலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபடும் 1,413 தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-21 23:30 GMT
சேலம், 

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் 1,048 நிரந்தர தூய்மை பணியாளர்கள் மற்றும் 1,063 சுய உதவிக்குழு தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 2,111 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் மாநகர் முழுவதும் தினமும் சுகாதார பணிகள் மேற்கொள்வதோடு, கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளிலும் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும், தூய்மை பணியார்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தினமும் காலை மற்றும் மதிய வேளைகளில் உணவுடன் சேர்த்து நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் வகையில் விலையில்லா முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியாளர்களின் உடல் நலத்தினை கருத்தில் கொண்டு 3 தினங்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைகள் செய்து தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதி மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன், மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்க மாநகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக 4 மண்டலங்களில் பணிபுரியும் 1,063 சுய உதவிக்குழு தூய்மை பணியாளர்களின் குடும்பங்களுக்கு 20 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், அடுத்த கட்டமாக 4 மண்டலங்களிலும் பணிபுரியும் 1,048 நிரந்தர தூய்மை பணியாளர்களின் குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் அஸ்தம்பட்டி மண்டலத்தில் பணிபுரியும் 150 நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அம்மாபேட்டை மண்டலத்தில் பணிபுரியும் 200 நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதி உதவியின் கீழ் கோகுலம் மருத்துவமனை சார்பில் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட 20 வகையான மளிகை பொருட்களை வழங்கினார்.

சேலம் மாநகரில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபடும் 1,413 தூய்மை பணியாளர்களுக்கு 20 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,048 நிரந்தர தூய்மை பணியாளர்களின் குடும்பங்களுக்கு அடுத்தடுத்த கட்டங்களாக மளிகை பொருட்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர் ஆர்.கவிதா, கோகுலம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அர்த்தனாரி, சுகாதார அலுவலர் மாணிக்கவாசகம், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரன், பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்