தனியார் அமைப்பு வழங்கிய நிவாரண பொருட்களை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
தனியார் அமைப்பு வழங்கிய நிவாரண பொருட்களை கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
சேலம்,
சேலம் மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட பஞ்சதாங்கி ஏரி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு அன்றாட கூலி தொழிலாளர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், நேற்று மதியம் ஒரு தனியார் அமைப்பை சேர்ந்தவர்கள், பஞ்சதாங்கி ஏரி பகுதி மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்குவதற்காக வந்தனர். இதுபற்றிய தகவல் அங்கு வேகமாக பரவியது. இதனால் வீடுகளில் இருந்த பொதுமக்கள், நிவாரண பொருட்களை பெறுவதற்காக அங்கு திரண்டனர். 200-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடியதால் பொருட்களை வழங்க முடியாமல் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் திணறினர்.
மேலும், ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்றதால் கொரோனா நோய் தொற்று ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால் அங்கு விரைந்து வந்த போலீசார், நிவாரண பொருட்களை இங்கு வினியோகம் செய்ய வேண்டாம் என்றும், அதற்கு பதில் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து அந்த அமைப்பை சேர்ந்தவர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். இதனை தொடர்ந்து பஞ்சதாங்கி ஏரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி வீடுகளுக்கு செல்லுமாறு கூறினர். மேலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசாரும், தனியார் அமைப்பை சேர்ந்தவர்களும் கூறினர். இதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.