புளியங்குடியில் மேலும் 5 பேர் பாதிப்பு: தென்காசியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வு - தென்மண்டல ஐ.ஜி. நேரில் ஆய்வு
புளியங்குடியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனவே, தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது.
புளியங்குடி,
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு நேற்று முன்தினம் வரை 23 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
நேற்று மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களையும் சேர்த்து தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்து உள்ளது.
இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும் தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு ஆகியோர் புளியங்குடிக்கு வந்தனர். அவர்கள் புளியங்குடி மெயின் ரோடு பகுதியில் கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளை டிரோன் கேமரா மூலம் பார்வையிட்டனர்.
பின்னர் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆகியோரிடம் எடுத்துரைத்தனர். அப்போது புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ், தென்காசி இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதற்கிடையே, புளியங்குடி நகராட்சி சார்பில் கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து சமுதாய தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. உதவி கலெக்டர் பழனிகுமார், கடையநல்லூர் தாசில்தார் அழகப்ப ராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். புளியங்குடியில் உள்ள அனைத்து சமுதாயங்களின் சார்பாக சுமார் 20 தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை தொடங்கி வைத்து தாசில்தார் அழகப்பராஜா பேசும்போது, ‘நகராட்சி சார்பில் அனைத்து பகுதி மக்களுக்கும் எல்லாவிதமான உதவிகளும் செய்யப்படும். உங்கள் பகுதியில் யாருக்கேனும் சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் உடனடியாக நகராட்சி அலுவலகத்துக்கோ, அரசு சுகாதார மையத்துக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். உங்கள் பகுதியில் உள்ள அனைவரையும் குறிப்பாக இளைஞர்கள், சிறுவர்கள், பெண்களை வெளியில் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தன்னார்வலர்கள் மூலமாக உங்கள் வீட்டிற்கே வந்து தருகிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசோடு இணைந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்‘ என்றார்.
கூட்டத்தில், நகராட்சி ஆணையாளர் குமார் சிங், பொறியாளர் சுரேஷ், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் ஈஸ்வரன், வெங்கட்ராமன், நகராட்சி மருத்துவர் ராஜா மற்றும் அனைத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.