வேலுரில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்க பணம் வசூலித்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு பணியிடை நீக்கம் - 3 பேர் இடமாற்றம்
வேலூரில் ஊரடங்கின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்க பணம் வசூலித்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோரை டி.ஐ.ஜி. காமினி பணியிடை நீக்கம் செய்தார். மேலும் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
வேலூர்,
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே தேவையின்றி சுற்றித்திரிபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் முதற்கட்ட ஊரடங்கின்போது உத்தரவை மீறிய 2 ஆயிரத்து 879 பேர் கைது செய்யப்பட்டு, சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 292 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் கடந்த 17-ந் தேதி முதல் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. வாகனங்களை ஒப்படைக்கும்போது உரிமையாளர்களிடம் போலீசார் லஞ்சம் வாங்க கூடாது. அதனை மீறி பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் அதனை பொருட்படுத்தாமல் சில போலீசார் வாகனங்களை திரும்ப ஒப்படைக்க பணம் பெறுவதாக டி.ஐ.ஜி. காமினினிக்கு புகார்கள் வந்தன. இது பற்றி விசாரிக்க போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமாருக்கு, டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.
விசாரணையில், வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார், ஏட்டு மணிமேகலை ஆகியோர் வியாபாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட தள்ளுவண்டியை திரும்ப ஒப்படைக்க பணம் பெற்றது தெரியவந்தது. மேலும் வேலூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன், வேலூர் வடக்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, பாகாயம் போலீஸ் நிலைய எழுத்தராக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் வாகனங்களை கொடுக்க பணம் வாங்கியதும் உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார், ஏட்டு மணிமேகலை ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. காமினி உத்தரவிட்டார். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன், ஆயுதப்படைக்கும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, பனமடங்கி போலீஸ் நிலையத்துக்கும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மேல்பாடி போலீஸ் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதேபோன்று கடந்த 18-ந் தேதி வாகனங்கள் ஒப்படைக்க உரிமையாளர்களிடம் பணம் வசூலித்ததாக வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜனை ஆலங்காயம் போலீஸ் நிலையத்துக்கு டி.ஐ.ஜி. காமினி பணியிட மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.