வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசார்-ஊர்க்காவல் படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர்

வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த போலீசார்-ஊர்க்காவல் படையினர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Update: 2020-04-21 03:59 GMT
பெரம்பலூர், 

வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த போலீசார்-ஊர்க்காவல் படையினர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

போலீஸ் ஏட்டுக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்த சேலம் மாவட்டம், நாவக்குறிச்சியை சேர்ந்த 47 வயதுடைய போலீஸ்காரர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அன்று, அவருடன் பணிபுரிந்த போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் மற்ற துறையினர் என மொத்தம் 39 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ? என்ற சந்தேகத்தில் சுகாதாரத்துறையினரால் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

பரிசோதனையின் முடிவில் அந்த 39 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டு, அவர்களை சுகாதாரத்துறையினர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

24 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

இந்நிலையில் வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீசார் 17 பேரும், ஊர்க்காவல் படையினர் 7 பேரும் என மொத்தம் 24 பேரை சுகாதாரத்துறையினர் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். மேலும் ஏற்கனவே அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள போலீசார்- ஊர்க்காவல் படையினரின் குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை சுகாதாரத்துறையினரால் மேற்கொள்ளப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்