துவரங்குறிச்சியில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாடுகள் விதிப்பு

துவரங்குறிச்சியில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-04-21 02:37 GMT
திருச்சி, 

துவரங்குறிச்சியில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம் துவரங்குறிச்சி கிராமத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 7 பேரும், அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்த 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய குடும்பங்கள் மற்றும் இவர்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள 93 குடும்பங்கள் வசிக்கும் தெருக்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, நோய் தொற்று பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி, நோய் தொற்று காரணமாக துவரங்குறிச்சி கிராமம், பொன்னம்பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண் 3, மற்றும் 4 முதல் 12 முடிய உள்ள வார்டுகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள நபர்கள் அத்தியாவசிய தேவையை தவிர வேறு எதற்கும் வெளியே செல்லக்கூடாது. தடை செய்யப்பட்ட பகுதிக்கு வெளியே வசிக்கும் பிற கிராமங்களை சேர்ந்தவர்கள் மருந்துகள் தேவை என துவரங்குறிச்சி பகுதிக்குள் நுழைவது தடை செய்யப்படுகிறது.

தடை உத்தரவு முடியும் வரை துவரங்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதிக்குள் இயங்கும் காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளும்(மருந்து கடைகள் தவிர) திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் உள்பட சரக்கு வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

பால், கியாஸ் சிலிண்டருக்கு அனுமதி

தடை செய்யப்பட்ட பகுதிக்கு வெளியே உள்ள மளிகை கடை உரிமையாளர்கள் மொத்த விற்பனை கடையில் மளிகை பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாட்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. துவரங்குறிச்சியில் செயல்படும் வங்கிகளில் பணிபுரியும் வங்கி வணிக தொடர்பாளர்கள் மூலம் கிராமங்களில் உள்ள அவர்களது வாடிக்கையாளர்களுக்கு பணப்பரிவர்த்தனை நடவடிக்கை மேற்கொள்ளவும் மற்றும் அருகில் உள்ள அதே வங்கி கிளைகள் மூலம் வங்கிப்பரிவர்த்தனை நடத்தி கொள்ளவும் வங்கி கிளை மேலாளருக்கு தெரிவிக்கப்படுகிறது.

பால் மற்றும் கியாஸ் சிலிண்டர் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கிடவும், துவரங்குறிச்சி பகுதிக்குள் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரும் மற்றும் எடுத்து செல்லும் சரக்கு வாகனங்களுக்கு உள்ளே நுழையும் போதும், வெளியே செல்லும்போதும் கிருமிநாசினி தெளித்திடவும், தடை செய்யப்பட்ட பகுதிக்கு வெளியே வசிக்கும் குடும்பத்தினருக்கு அவரவர் வசிக்கும் இடங்களிலேயே அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஆவன செய்திடவும், பொன்னம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் இந்த உத்தரவின் அடிப்படையில் உரிய கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்