கள்ளக்குறிச்சியில், ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் - கவுதமசிகாமணி எம்.பி. வழங்கினார்
கள்ளக்குறிச்சியில் ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை கவுதமசிகாமணி எம்.பி. வழங்கினார்.
கள்ளக்குறிச்சி,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலையிழந்த தொழிலாளர்கள் வருமானமின்றி, உணவு பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் கள்ளக்குறிச்சி பகுதியில் வேலையின்றி சிரமப்படும் ஆட்டோ மற்றும் வேன் டிரைவர்கள், சலவை தொழிலாளர்கள், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆகியோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொன். கவுதமசிகாமணி எம்.பி. தலைமை தாங்கி, ஆட்டோ மற்றும் வேன் டிரைவர்கள், சலவை தொழிலாளர்கள், ஆம்புலன்ஸ் பணியாளர்கள், முடி திருத்துவோர், நீலமங்கலம் நரிக்குறவர் காலனி மக்கள் என மொத்தம் 1,001 பேருக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களையும், முக கவசம், கிருமி நாசினி போன்றவற்றையும் வழங்கினார்.
அப்போது தி.மு.க. மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி, சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், மாவட்ட அவைத்தலைவர் ராம்மூர்த்தி, நகர செயலாளர் சுப்ராயலு உள்பட பலர் உடனிருந்தனர்.