கொரோனா வைரஸ் சமூக தொற்றாக பரவாமல் தடுக்க அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் - மண்டல சிறப்பு குழு அதிகாரி வேண்டுகோள்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக பரவாமல் தடுக்க அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மண்டல சிறப்பு குழு அதிகாரி சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2020-04-20 22:45 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கி பேசுகையில், மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மேலும் கொரோனா பரவாமல் தடுக்க வேண்டும்.

மற்ற நாடுகளில் கொரோனா எந்த அளவுக்கு பரவி பாதித்து உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தமிழ்நாட்டில் அந்த அளவுக்கு இல்லை. இருந்தாலும் நீங்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது. சமூக இடை வெளியை நாம் அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணி மண்டல சிறப்பு குழுவை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்பிரமணியன், கூடுதல் டி.ஜி.பி. வினித்தேவ் வான்கடே, மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் சிறப்பு அதிகாரி சுப்பிரமணியன் பேசுகையில், மாவட்டத்தில் 13 பேருக்கு முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாவட்டத்தில் பரவாமல் தடுக்க அனைத்து துறை அலுவலர்கள், குறிப்பாக வருவாய் மற்றும் மருத்துவ துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலமாக உள்ள பகுதி மக்கள் கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. ஆனால் பண்ருட்டி நகராட்சி பகுதியில் பொதுமக்கள் அதிகம் பேர் வீட்டை விட்டு வெளியே செல்கின்ற னர். இதை தடுக்க வேண் டும். அதேபோல் நெல்லிக்குப்பம் பகுதியிலும் பெரும்பாலானோர் வெளியில் சுற்றித்திரிகின்றனர். லால்பேட்டை பகுதியில் மக்கள் ஊரடங்கை சரியாக கடைபிடிக்கிறார்கள். நோய் தொற்றை கண்டறியும் ரேபிட் கிட் கடலூர் மாவட்டத்திற்கு விரைவில் கிடைத்து விடும். ஆகவே நோய் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு சிறப்பு அதிகாரி சுப்பிரமணியன் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமாறன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி, நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்