மராட்டியத்தில் கடந்த 36 மணி நேரத்தில் கொரோனாவால் 835 பேர் பாதிப்பு - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தகவல்
மராட்டியத்தில் கடந்த 36 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 835 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
மும்பை,
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் உயிர்கொல்லி கொரோனா வைரசால் மராட்டியம் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இந்த நோய் பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் மராட்டியம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
மாநிலத்தில் நேற்று முன்தினம் வரை 4 ஆயிரத்து 200 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்தநிலையில் மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 466 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாவும், இதனால் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 666 ஆக உயர்ந்து இருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
பலி எண்ணிக்கை 232 ஆக உயர்ந்து இருப்பதாகவும், குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 572 ஆக அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
மாநிலத்தில் கொரோனா வைரசின் தாக்கல் பெரியளவில் இல்லாத ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களின் சில பகுதிகளில் மட்டும் தொழிற்சாலைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளன. ஆனால் இதை கொரோனா வைரசின் அச்சுறுத்தல் குறைந்து விட்டது என்பதற்கான அறிகுறியாக பார்க்க கூடாது.
மராட்டியத்தில் கடந்த 36 மணி நேரத்தில் புதிதாக 835 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கின் கடுமையான விதிமுறைகளை தளர்த்தி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.