மனைவிகளால் கொடுமைப்படுத்தப்படும் ஆண்களை பாதுகாக்க வேண்டும் - முதல்-அமைச்சருக்கு கோரிக்கை

ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் இருக்கும் ஆண்களை மனைவிகள் கொடுமை செய்வதாகவும், ஆண்களை பாதுகாக்க தனியாக ஒரு ‘ஹெல்ப் லைன்’ தொலைபேசி எண் சேவையை உருவாக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2020-04-20 23:01 GMT
சென்னை, 

தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் வக்கீல் டி.அருள்துமிலன். இவர், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கொரோனா என்ற கொடிய வைரசுக்கு பயந்து மரண பீதியில் உலக மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். இதனால், வீட்டில் அடைபட்டு கிடக்கும் ஆண்களின் நிலை பரிதாபமாக உள்ளது. குடும்ப வன்முறை உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் ஆண்களை ஆட்டிப்படைக்கிறது. பெண்களுக்கு ஆதரவான சட்டங்களை காட்டி, ஆண்கள் பலர் தங்களது மனைவிகளால் மிரட்டப்படுகின்றனர். அடிமைப்படுத்தப்படுகின்றனர்.

உண்மை நிலை இவ்வாறு இருக்க, குடும்ப வன்முறையில் ஈடுபடும் ஆண்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று கூடுதல் டி.ஜி.பி., ரவி வெளியிட்டுள்ள அறிக்கை ஆண்களுக்கு கடுமையான வேதனைகளை தருகிறது. சொந்த வீட்டில் உணவுக்காக ஆண்கள் கையேந்தும் நிலையில் உள்ளனர்.

பலர் மனதளவில் மனைவிகளால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். நிராயுதபாணியாகவும், குடும்ப வன்முறை குறித்து புகார் கொடுக்க முடியாமலும், பல ஆண்கள் வெளியில் சொல்லமுடியாத இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

பாதுகாக்க வேண்டும்

ஆனால், தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு மகளிர் ஆணையம் ஆகியவை இந்த ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளன. ஆண்கள் எதிர்கொள்ளும் குடும்ப வன்முறைகளை முறையிடவே இடமில்லாத சூழலில், இந்த அறிக்கை ஒருதலைபட்சமானதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும். எனவே கொரோனா எனும் கொடும் வைரசைவிட, குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்படும் ஆண்களை பாதுகாத்திடவேண்டும். குறைந்தபட்சம் ஆண்களின் பிரச்சினைகளைத் தெரிவிக்க, ஒரு ‘ஹெல்ப் லைன்’ தொலைபேசி எண் சேவையை அரசு உடனடியாக தொடங்கவேண்டும். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். ஆண்களை பாதுகாக்க ஆண்கள் ஆணையமும் உருவாக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்