பறிக்காமல் விட்டால் செடிகளில் காய்க்கும் திறன் குறையும் என்பதால் ஒரு கிலோ ரூ.6-க்கு பச்சை மிளகாயை விற்கும் விவசாயிகள்

ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியூருக்கு அனுப்ப முடியாததாலும், பறிக்காமல் விட்டால் செடிகளில் காய்க்கும் திறன் குறையும் என்பதாலும் பச்சைமிளகாயை ஒரு கிலோ ரூ.6-க்கு விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் கண்ணீருடன் கூறினர்.

Update: 2020-04-20 22:49 GMT
அய்யம்பேட்டை, 

ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியூருக்கு அனுப்ப முடியாததாலும், பறிக்காமல் விட்டால் செடிகளில் காய்க்கும் திறன் குறையும் என்பதாலும் பச்சைமிளகாயை ஒரு கிலோ ரூ.6-க்கு விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் கண்ணீருடன் கூறினர்.

பச்சை மிளகாய்

இந்திய சமையலில் முக்கியமான இடத்தை வகிக்கும் சுவை காரம். இந்த சுவைக்காக அதிகமாக சமையலில் பயன்படுவது பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் ஆகியவையே. இன்றளவும் பல கிராமங்களில் காலை உணவாக பச்சை மிளகாயும், பழைய சோறும் சாப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள குடிக்காடு, கருப்பூர், புத்தூர், மேட்டுத்தெரு, நாயக்கர்பேட்டை, இளங்கார்குடி, கூடலூர், பட்டுக்குடி ஆகிய பகுதிகளிலும், கொள்ளிடம் ஆற்றின் நடுத்திட்டு கிராமமான மேலராமநல்லூர், கீழராமநல்லூர் ஆகிய ஊர்களிலும் ஏராளமாக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

300 ஏக்கரில் சாகுபடி

படுகை நிலங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்ட பச்சை மிளகாய் தற்போது வயல் வெளிகளிலும்(நஞ்சை நிலங்கள்) சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் சுமார் 300 ஏக்கரில் விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளதால் மிளகாய்களை பறித்து வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். மேலும் பறிக்காமல் மிளகாய்களை செடியிலேயே விட்டால் காய்க்கும் திறன் குறைந்து விடும் என்பதால் குறைந்த விலைக்கு மிளகாயை விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள். தற்போது பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.6-க்கு விற்பனையாகிறது. வேறு வழியின்றி வந்த விலைக்கு விற்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இது குறித்து பட்டுக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி சரவணபவா கூறியதாவது:-

ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம் செலவு

கடந்த பல ஆண்டுகளாக எங்கள் பகுதியில் நாங்கள்(விவசாயிகள்) பச்சை மிளகாய் சாகுபடி செய்து வருகிறோம். டீசல் விலை உயர்வு, கூலி ஆட்கள் சம்பளம், உரம் போன்றவற்றிற்காக ஒரு ஏக்கருக்கு சாகுபடி செலவு ரூ.75 ஆயிரம் ஆகிறது. இப்போது இந்த பகுதியில் தீவிரமாக பச்சை மிளகாய் அறுவடை நடந்து வருகிறது. அறுவடை செய்த பச்சை மிளகாயை தஞ்சை, கும்பகோணம், திருவையாறு ஆகிய ஊர்களில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகிறோம்.

ஒரு கிலோ ரூ.6-க்கு விற்பனை

கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு காரணமாக மிளகாய் கொள்முதலுக்கு வெளி மாநில, வெளி மாவட்ட வியாபாரிகள் யாரும் வருவதில்லை. இதனால் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.6-க்கு விற்பனையாகிறது. சாகுபடி செலவுபோக தற்போது பறிக்கும் கூலி, வாகன வாடகை, கமிஷன் என இந்த ரூ.6-ம் அதற்கே சரியாகி விடும். சரியான விலை கிடைக்காததால் பச்சை மிளகாய் சாகுபடி செலவுக்கு வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் தவிக்கிறோம்.

ஒரு கிலோ மிளகாய் ரூ.20-க்கு விற்றால்தான் சாகுபடி செலவையாவது ஈடுகட்ட முடியும். இந்த நிலையில் மிளகாயை வெளியூர்களுக்கு அனுப்ப முடியாததால், வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு மிளகாயை கொண்டு வர வேண்டாம் என கூறுகின்றனர். இருப்பினும் தற்போது பறிப்பதை நிறுத்திவிட்டால் செடிகள் காய்க்கும் திறனை இழந்துவிடும் என்பதால் பறித்த மிளகாயை வந்த விலைக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றோம். எனவே கடனில் தத்தளிக்கும் மிளகாய் விவசாயிகளுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்