கோமுகி அணை வறண்டது குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கோமுகி அணை வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

Update: 2020-04-19 22:15 GMT
கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன் மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 46 அடியாகும். பருவமழை காலங்களில் கோமுகி அணை நிரம்பும்போது பொதுவாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெற்று வருகிறது.

இதேப்போல் அணையின் பழைய பாசன வாய்க்கால் மற்றும் புதிய பாசன வாய்க்கால் வழியாக திறக்கப்படும் தண்ணீர் மூலம் வடக்கநந்தல் பேரூராட்சி, பரிகம், பால்ராம்பட்டு, மாதவச்சேரி எடுத்தவாய்நத்தம், கரடிசித்தூர், ஆலத்தூர் மற்றும் சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகள் பாசனவசதி பெறுகின்றன.

இப்போது கோடைகாலம் என்பதால் கல்வராயன் மலையில் உள்ள ஓடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் வறண்டுபோய் காட்சி அளிக்கிறது.

இதனால் கோமுகி அணையும் வறண்டு போய் உள்ளது. இதன் காரணமாக கோமுகி அணையையொட்டியுள்ள கச்சிராயப்பாளையம்,வடக்கநந்தல் பேரூராட்சி, பரிகம், கரடிசித்தூர், பால்ராம்பட்டு, மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் செய்திகள்