திட்டக்குடி அருகே, தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7¼ பவுன் நகை பறிப்பு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திட்டக்குடி அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7¼ பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-04-19 22:00 GMT
திட்டக்குடி,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள நிதிநத்தம் மேலத்தெருவை சேர்ந்தவர் சக்தி குமார். விவசாயி. இவருடைய மனைவி சுகந்தி (வயது 26). இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு தனது மாடி வீட்டின் முன்பகுதியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு 12 மணியளவில் முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர், சுகந்தியின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். இதில் திடுக்கிட்டு எழுந்த சுகந்தி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்தனர். அதற்குள் மர்மநபர்கள் சுகந்தியின் கழுத்தில் கிடந்த 7¼ பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.2¼ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதேபோல் அதே பகுதியில் வசிக்கும் விவசாயி சுப்பிரமணியன் (48) என்பவருடைய வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து ரூ.15 ஆயிரம் மற்றும் அங்கிருந்த தகர பெட்டியில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம், வெள்ளி ஆகியவற்றையும் மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஆவினங்குடி போலீசாருக்கு தனித்தனி புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து நகை-பணம் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்