திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 4 பேர் வீடு திரும்பினர்
தொற்று இல்லை என்பது உறுதியானதால் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் வீடு திரும்பினர்.
திருச்சி,
தொற்று இல்லை என்பது உறுதியானதால் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் வீடு திரும்பினர்.
கொரோனா வைரஸ் தொற்று
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 32 பேர் சமீபத்தில் குணமாகி வீடு திரும்பினர். இதையடுத்து 17 பேர் மட்டும் வைரஸ் தொற்றுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அதன்பிறகு பெரம்பலூரை சேர்ந்த போலீஸ் ஏட்டு, ஒரு சிறுவன் உள்பட 3 பேர் 2 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பாதிப்புடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.
4 பேர் வீடு திரும்பினர்
இந்தநிலையில் அரியலூரை சேர்ந்த 2 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. உடனே அவர்களும் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இதன் மூலம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்தது. இது தவிர, கொரோனா தொற்று இல்லாமல் மேலும் 20 பேர் அரசு மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்தனர்.
அவர்களில் 4 பேருக்கு மீண்டும் வந்த பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என உறுதியானது. இதையடுத்து நேற்று மாலை 4 பேரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதற்கிடையே துவரங்குறிச்சியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.