நாகை மாவட்டத்தில் நடமாடும் வேளாண் விரிவாக்க மையங்கள் கலெக்டர் தகவல்
நாகை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான வேளாண்மை இடுபொருட்கள் கிடைக்கும் வகையில் நடமாடும் வேளாண் விரிவாக்க மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான வேளாண்மை இடுபொருட்கள் கிடைக்கும் வகையில் நடமாடும் வேளாண் விரிவாக்க மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என கலெக்டர் பிரவீன்நாயர் கூறினார்.
குறுவை சாகுபடி
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் சாகுபடி பணி நடைபெற்று வருகிறது. குறுவை மற்றும் சித்திரைப்பட்டத்திற்கு தேவையான நெல், உளுந்து, எண்ணெய்வித்து விதைகள் அரசு வேளாண் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் வேளாண்மை பணிகள் அத்தியாவசிய பணிகளாக கருதப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு வேளாண்மை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வேளாண் மையங்கள்
அதன்படி ஊரடங்கு காலத்தில், விவசாயிகளுக்கு தேவையான வேளாண் இடுபொருட்கள் அவர்களின் கிராமங்களிலேயே கிடைக்க வாகனங்கள் மூலம் நடமாடும் வேளாண் விரிவாக்க மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் விவசாயிகள் உரக்கடைகளை நாடி செல்வதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு சில இடங்களில் விவசாயிகளின் இருப்பிடங்களுக்கே சென்று நேரடியாக உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.