மராட்டியத்தில் ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா - 12 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 552 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 12 பேர் உயிரிழந்தனர்.
மும்பை,
நாட்டில் கொடிய கொரோனா பாதிப்பில் மராட்டியம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று அதன் தாக்கம் புதிய உச்சத்தை தொட்டது.
அதன்படி ஒரே நாளில் 552 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டடனர். இதனால் மாநிலம் முழுவதும் பாதித்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 200 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோல மேலும் 12 பேர் ஒரே நாளில் இறந்தனர். இதனால் கொரோனா தொற்றுக்கு பலி எண்ணிக்கை 223 ஆக அதிகரித்தது. அதேவேளையில் இதுவரை 507 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
மும்பை
இதேபோல மாநில தலைநகர் மும்பையில் புதிதாக 135 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் இங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 798 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல மும்பையில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்து இருக்கிறது.
இதுதவிர மும்பையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 29 பேர் குணமாகி நேற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மும்பையில் 310 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். இதேபோல தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் புதிதாக 20 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை 138 ஆக அதிகரித்து உள்ளது.