முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்காக சென்னையில் 3 நடமாடும் ‘கொரோனா’ பரிசோதனை மையம்
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்காக சென்னையில் 3 நடமாடும் கொரோனா பரிசோதனை மையம் இன்று முதல் பணியை தொடங்குகிறது.
சென்னை,
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்ட 80-க்கும் மேற்பட்ட பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களின் உடல்நலம் குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் ஆகிய ‘கொரோனா’ அறிகுறி உள்ளவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். எனப்படும் நவீன பாதுகாப்பு கருவி மூலம் தொண்டை சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுகின்றன. சென்னையில் 25 இடங்களில் பி.சி.ஆர். சோதனை மையம் இயங்கி வருகிறது.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் பி.சி.ஆர். சோதனை மையங்களுக்கு செல்வதில் சிரமம் இருப்பதை கருத்தில் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், ‘ஆம்புலன்ஸ்’ போன்ற வாகனத்தில் பி.சி.ஆர். கருவிகளை பொருத்தி நடமாடும் சோதனை மையம் அமைக்கப்பட்டது. 3 வாகனங்கள் இது போன்று வடிவமைக்கப்பட்டது. இந்த வாகனத்தை ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், ‘வாகனத்தின் உள்ளே இருந்து வெளியே இருப்பவர்களிடம் பேச முடியவில்லை என்பதை உணர்ந்தார். இதையடுத்து அவர், அந்த வாகனங்களின் உள்ளே இருந்து பேசினால் வெளியே கேட்கும் வகையில் ‘ஸ்பீக்கர்’ கருவி பொருத்த உத்தரவிட்டார். அதன்பேரில் அந்த 3 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்களில் ‘ஸ்பீக்கர்’ கருவி பொருத்தும் பணி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ‘கொரோனா’ பாதிப்பு பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களிடம் இன்று முதல் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.