ஊரடங்கு உத்தரவு காரணமாக பறிக்காமல் விட்டதால், செடியிலேயே கருகும் கத்தரிக்காய்கள்
ஊரடங்கு உத்தரவு காரணமாக பறிக்காமல் விட்டதால் செடியிலேயே கத்தரிக்காய்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்,
ஊரடங்கு உத்தரவு காரணமாக பறிக்காமல் விட்டதால் செடியிலேயே கத்தரிக்காய்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கத்தரிக்காய் சாகுபடி
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சையில் நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு, வாழை, வெற்றிலை சாகுபடி நடைபெறும். மேலும் பணப்பயிர்களான பூக்கள் சாகுபடி, எள், உளுந்து, வேர்க்கடலை, கத்தரிக்காய், வெண்டைக்காய், மக்காச்சோளம், சூரியகாந்தி, வெள்ளரிக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய் உள்ளிட்டவைகளும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது எள் மற்றும் உளுந்து ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டி, மாப்பிள்ளைநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கத்தரிக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக காய்கறி, மளிகை, மருந்து வாங்குவதற்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
செடியிலேயே கருகும் அவலம்
விவசாய வேலைக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோடை நெல் நடவு, உளுந்து அறுவடை, எள் அறுவடை பணிகள் போன்றவை நடந்து வருகின்றன. இந்த நிலையில் பல பகுதிகளில் விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. மேலும் விளைவித்த காய்கறிகள், பூக்கள் இவற்றை சந்தைக்கு கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதாலும் பூக்கள், காய்கறிகள் உள்ளிட்டவை செடியிலேயே கருகி வருகின்றன.
தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டி, மாப்பிள்ளை நாயக்கன்பட்டி பகுதிகளில் சாகுபடி செய்த கத்தரிக்காய்கள், பறிக்கப்படாமல் செடியிலேயே கருகி வருகின்றன. இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை, தஞ்சை உழவர் சந்தை, திருச்சி மார்க்கெட் போன்றவற்றுக்கு விற்பனைக்கு அனுப்புவது வழக்கம். தற்போது பறிக்க ஆட்கள் வராததாலும், விற்பனைக்கு கொண்டு செல்ல சிரமம் இருப்பதாலும் பறிக்காமல் விட்டு விட்டனர். இதனால் கத்தரிக்காய்கள் செடியிலேயே பழுத்தும், காய்ந்தும் வருகின்றன.
ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவு
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “1 ஏக்கர் கத்தரிக்காய் சாகுபடி செய்வதற்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு ஆகிறது. தற்போது செடிகளில் நன்றாக காய்த்து அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் ஊரடங்கு காரணமாக கத்தரிக்காய் பறிப்பதற்கு ஆட்கள் வராததால் நாங்கள் என்ன செய்வது? என்று தெரியவில்லை.
சாகுபடிக்கு செய்த செலவை கூட எங்களால் ஈடுகட்ட முடியவில்லை. இதனால் கத்தரிக்காய் செடியிலேயே கருகி வருகின்றன. இதனால் எங்களுக்கு நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றனர்.