சாலையோரங்களில் விற்பனைக்காக குவித்து வைப்பு: வாங்க ஆள் இல்லாததால் அழுகி வரும் தர்ப்பூசணி பழங்கள்
சாலையோரங்களில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள தர்ப்பூசணி பழங்களை வாங்க ஆள் இல்லாததால் அழுகி வருகின்றன. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்,
சாலையோரங்களில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள தர்ப்பூசணி பழங்களை வாங்க ஆள் இல்லாததால் அழுகி வருகின்றன. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்துள்ளது. அத்தியாவசிய தேவைக்கான பொருட்களான மளிகை, காய்கறி, பால், மருந்துகள் போன்றவை வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே சென்று வருகிறார்கள். அதுவும் பொதுமக்கள் வெளியே வருவதற்காக 3 வண்ணங்களில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நாட்களில் மட்டும் இந்த அட்டை வைத்து இருப்பவர்கள் வெளியே வந்து பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். அதுவும் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதை மீறி வெளியே வருபவர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்தும், அவர்கள் வைத்திருக்கும் வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
தர்ப்பூசணி
தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெயில் காலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் தர்ப்பூசணி பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். மேலும் தற்போது தர்ப்பூசணி சீசன் என்பதால் தஞ்சை நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி மற்றும் திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து தஞ்சைக்கு தர்ப்பூசணி பழங்கள் லாரிகளில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. தஞ்சை பகுதிகளில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தர்ப்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு வரை தர்ப்பூசணி பழங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டன.
அழுகி வரும் பழங்கள்
ஆனால் தற்போது பழங்கள் விற்பனையாகவில்லை. இதனால் சாலையோரங்களில் பழங்களை குவித்து வைத்து வியாபாரிகள் காத்துக்கிடக்கின்றனர். முன்பு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட தர்ப்பூசணி தற்போது கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் வாங்குவதற்கு ஆளில்லை.
இதனால் சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள பழங்கள் அழுகி வருகின்றன. வியாபாரிகளும் 2 நாட்களுக்கு ஒருமுறை பழங்களை இடமாற்றம் செய்து வருகின்றனர். இருப்பினும் கிலோ கணக்கில் பழங்கள் அழுகி வருகின்றன. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
வியாபாரிகள் வேதனை
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து தர்ப்பூசணி பழங்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தர்ப்பூசணி பழங்களை அதிகபட்சம் 1 வாரம் வரை வைத்து பாதுகாக்கலாம். அதன் பின்னர் அழுகத்தொடங்கி விடும். நஷ்டம் அடைந்தாலும் பரவாயில்லை.
விலையை குறைத்து விற்பனை செய்யலாம் என்றால் யாரும் வாங்குவதற்கு வருவதில்லை. பழங்கள் விற்பனையாகாததால் இரவிலும் காத்துக்கிடக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த முறை பழங்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்ததில் 5 டன் பழங்கள் அழுகி விட்டன. தற்போதும் ஏராளமான பழங்கள் அழுகி வருகின்றன” என்று வேதனையுடன தெரிவித்தனர்.