திருப்போரூர் அருகே, வக்கீலை தாக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் - போலீஸ் நிலையம் முற்றுகை
திருப்போரூர் அருகே வக்கீலை தாக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
திருப்போரூர்,
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த காயார் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சுசீலா தேவி நெல்லிக்குப்பம், கீலூர் உள்ளிட்ட கிராமங்களில் ஊரடங்கை மீறி கூட்டமாக யாரேனும் இருக்கிறார்களா என்று ஆட்டோவில் சென்று பார்வையிட்டார்.
கீழூர் கிராமம் வழியாக சென்ற போது போலீசை எதிர்த்து பேசியதாக யோகராணி (வயது 27) என்ற பெண்ணை ஆட்டோவில் ஏறும் படி கூறினார். இதை தட்டிக்கேட்ட அதே பகுதியைச் சேர்ந்த வக்கீல் நீலமோகன் (27) என்பவரின் கன்னத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அறைந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து வக்கீல்கள் ராதாரவி, இளங்கோவன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் திருப்போரூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கும் வக்கீல்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் செல்போன் மூலம் பேசியும் சமரசம் ஆகாததால் பெண் சப்-இன்ஸ்பெக்டர் சுசீலா தேவி மீது வக்கீலை தாக்கியதாக திருப்போரூர் போலீசார் சி.எஸ்.ஆர்.பதிவு செய்ததால் வக்கீல்கள் கலைந்து சென்றனர்.