வாலாஜாபாத் அருகே, வடமாநில தொழிலாளர்களுக்கு 2-ம் கட்ட மருத்துவ பரிசோதனை - மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆய்வு
வாலாஜாபாத் அருகே 2-ம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. மருத்துவ பரிசோதனையை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாலாஜாபாத்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் 8 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததில் 6 பேர் வீடு திரும்பினர். தற்போது 2 பேர் மட்டுமே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வடமாநிலத்தவர்கள் 37 ஆயிரத்து 500 பேர் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களுக்கு மார்ச் முதல் வாரத்தில் முதல் கட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இது மட்டுமில்லாமல் எழிச்சூர் பகுதியில் உள்ள தொழிலாளர் நல வாரிய தங்கும் விடுதியில் 300-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் 7 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு 140 இடங்களில் தங்கியுள்ளவர்களுக்கு 2-ம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது வருகிறது.
வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியில் உள்ள தொழிற்சாலை விடுதியில் தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்களுக்கு செய்யப்படும் 2-ம் கட்ட மருத்துவ பரிசோதனையை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசுகையில், காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளதா என்பதை எளிதில் கண்டறிய உதவும் 300 ரேபிட் டெஸ்ட் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதிக பாதிப்பு உள்ள பகுதிகளான நான்கு மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இக்கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது வாலாஜாபாத் துணை ஆர்.டி.ஓ. ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் சங்கீதா, டாக்டர் தனசேகரன் உடன் இருந்தனர்.