பணி செய்ய விடாமல் போலீசார் தடுப்பதாக புகார்: கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள்
கும்மிடிப்பூண்டியில் கொரோனா பணியில் ஈடுபட்டு வரும் தங்களை பணி செய்ய விடாமல் வழக்குகள் பதிந்து வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்வதாக கூறி தாசில்தார் அலுவலகத்தை அரசு ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் கொரோனா தடுப்பு பணியையொட்டி தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிப்பவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை சுகாதார துறையுடன் இணைந்து பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
இது தவிர வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களையும், முதியவர்களுக்கு அரசு உதவி தொகைகளையும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த அத்தியாவசிய பொருட்களை கொண்டு போய் சேர்க்கும் பணியில் வருவாய்த்துறை அலுவலர்களும்,ரேஷன் கடை ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய அரசு பணியாளர்கள் அனைவரும் தங்களது மோட்டார் சைக்கிள்களில் ஒவ்வொரு இடத்திற்கும் நேரில் சென்று இரவு பகலாக களப்பணி செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கும்மிடிப்பூண்டி, சிப்காட் மற்றும் கவரைப்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார் சிலரும், போக்குவரத்து போலீசாரும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு பணியாளர்கள் மீது ஹெல்மெட் அணிந்து வரவில்லை என்பது உள்பட பல்வேறு வழக்குகளை பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் நேற்று கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர்.
அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களான தங்களை போலீசார் பணிசெய்ய விடாமல் தரக்குறைவாக பேசி வருவதை கைவிட வேண்டும், தங்களது சாலைகளில் செல்லும்போது, அடையாள அட்டையை காண்பித்தால் அனுமதிக்க வேண்டும், எனவும் அவர்கள் தாசில்தாரிடம் முறையிட்டு புகார் மனு ஒன்றை அளித்தனர்.
தகவலறிந்து நேரில் வந்த கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், தாசில்தார் குமாருடன் இணைந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
அரசு ஊழியர்கள் மீது தற்போது போடப்பட்டு உள்ள வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டு மோட்டார் சைக்கிள்கள் விடுவிக்கப்படும் என்று தாசில்தார் குமார் உறுதியளித்தார். இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.