சேலம் பழைய பஸ்நிலைய சந்தையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் காய்கறிகள் வாங்கிய பொதுமக்கள்

சேலம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள தற்காலிக சந்தையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் காய்கறிகள் வாங்கி சென்றனர்.

Update: 2020-04-19 20:42 GMT
சேலம்,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், அஸ்தம்பட்டி சிறைச்சாலை முனியப்பன் கோவில் வளாகம், அம்மாபேட்டை, தாதகாப்பட்டி உள்பட 8 இடங்களில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே செயல்படும் இந்த சந்தைகளுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடை பிடித்து காய்கறிகளை வாங்கி செல்ல வேண்டும் என்று அறி வுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சேலம் பழைய பஸ் நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சந்தையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். அப்போது, பெரும்பாலானோர் கடைகள் முன்பு சமூக இடைவெளியை பின்பற்றாமல் காய்கறிகளை வாங்கி சென்றதை காண முடிந்தது.

கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளி விட்டு காய்கறிகளை வாங்கி செல்ல வேண்டும் என்றும், மேலும், முக கவசம் அணிந்து வெளியே வர வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் காய்கறி வாங்குவதற்கு சகஜமாக வந்து செல்கிறார்கள். எனவே சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, தற்காலிக சந்தையில் ஆளில்லா குட்டி விமானம் (ட்ரோன் கேமரா) மூலம் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்காமல் காய்கறி வாங்குகிறார்களா? என போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்