நெல்லை-தென்காசியில் 6 பேருக்கு கொரோனா தொற்று - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84 ஆக உயர்வு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்து உள்ளது.
நெல்லை,
சீனாவில் தோன்றி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நெல்லை மாவட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் ஏற்கனவே 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.
அவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நேற்று மாலையுடன் 26 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.
மேலும் 6 பேருக்கு தொற்று
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் பத்தமடையை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே 18 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. தற்போது அங்கு மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் 4 பேரும் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர்கள்.
அவர்களும் நேற்று மாலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து உள்ளது.