கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - மண்டல சிறப்பு அதிகாரி கருணாகரன் பேட்டி
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு தொடர்பாக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மண்டல சிறப்பு அதிகாரி கருணாகரன் கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட போல்டன்புரம் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மற்றும் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை நெல்லை மண்டல கொரோனா கண்காணிப்பு சிறப்பு அதிகாரி கருணாகரன், கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன், மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.
அப்போது, தூய்மை பணியாளர்கள் தினந்தோறும் களப்பணியில் ஈடுபடும்போது முககவசம் அணிகிறார்களா? அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகள் வழங்கப்படுகிறதா? என்பதை அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை, முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளதா? என்பதையும் கேட்டறிந்தனர். முககவசங்களை தினந்தோறும் புதிதாக மாற்றி அணிய வேண்டும் என்று தன்னார்வலர்களுக்கு அறிவுறுத்தினர். பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் கொரோனா கண்காணிப்பு சிறப்பு அதிகாரி கருணாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒத்துழைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதித்த 2 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்று (அதாவது நேற்று) 5 பேர் குணமடைந்து உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 9 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் தினந்தோறும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட போல்டன்புரம் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவின்போது தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே வெளிவர வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். வீட்டில் இருந்து வெளியே சென்று வந்தால் உடனடியாக கைகளை நன்றாக கழுவ வேண்டும். அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் திருவாசகமணி, உறைவிட மருத்துவர் சைலேஸ் ஜெயமணி, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், ராமசந்திரன், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.