செங்கம் அருகே, ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் தர்ணா
செங்கம் அருகே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கம்,
ஊரடங்கு உத்தரவால் 100 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் செயல்படுத்தபடாத நிலையில் உள்ளது. இந்தநிலையில் 100 நாள் வேலை செய்ததாக, செங்கம் ஒன்றியத்துக்குட்பட்ட வளையாம்பட்டு ஊராட்சியில் உள்ள சிலருக்கு வங்கி கணக்கில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தை ஊராட்சி நிர்வாகத்துக்கு திருப்பித் தர வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் தரப்பில் கேட்டதாக கிராம மக்கள் கூறினர்.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கேட்டதற்கு ஊராட்சி நிர்வாகம் தரப்பில் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம இளைஞர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, ஊராட்சி மன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டு, திடீரெனச் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஊரடங்கு நேரத்தில் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்பட்டதும் தர்ணாவை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் வளையாம்பட்டு கிராமத்தில் பரபரப்பு நிலவியது.