குடியாத்தம் அருகே காட்டு யானைகள் அட்டகாசம் - கேழ்வரகு, நெற்பயிரை துவம்சம் செய்தன
குடியாத்தம் அருகே காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. கேழ்வரகு, நெற்பயிரை துவம்சம் செய்தன.
குடியாத்தம்,
குடியாத்தம் வனப்பகுதி ஆந்திர மாநில எல்லையையொட்டி உள்ளது. அப்பகுதியிலுள்ள வனப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. அந்த யானைகள் அடிக்கடி தமிழக எல்லையோர கிராமங்களில் உள்ள வேளாண் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. அந்தக் காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் குடியாத்தத்தை அடுத்த பரதராமி, கொத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணியளவில் நடமாடிய இரு காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. அப்பகுதியில் உள்ள வேலு, அசோகன் ஆகியோரின் நிலத்துக்குள் காட்டு யானைகள் புகுந்தன. யானைகளை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் காட்டு யானைகளை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் காட்டு யானைகள் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர், கேழ்வரகு பயிரை தின்றும், மிதித்தும் துவம்சம் செய்தன.
இதுகுறித்து விவசாயிகள் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன், வனவர் முருகன், வனக்காப்பாளர் பூபதி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்கள் உதவியோடு பட்டாசுகள் வெடித்தும், மேளம் அடித்தும் பல மணி நேரம் போராடி காட்டு யானைகளை ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
அதேபோல் 7 காட்டு யானைகள் குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டா பகுதியில் உள்ள எஸ்.எம்.தேவராஜ் என்பவருடைய மாந்தோப்புக்குள் புகுந்து மா மரங்களை சேதப்படுத்தின. தகவல் அறிந்ததும் வனத்துறையைச் சேர்ந்த மற்றொரு குழுவினர் விரைந்து வந்து காட்டு யானைகளை பல மணி நேரம் போராடி விரட்டியடித்தனர்.
காட்டு யானைகள் ஆந்திர மாநில எல்லையில் இருந்து தமிழக எல்லைக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், காட்டு யானைகளால் விளை பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். காட்டு யானைகள் நடமாட்டத்தால் மேற்கண்ட பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.